மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியான ‘ப்ரதி பூவன்கோழி’ படத்தின் ஒட்டுமொத்த ரீமேக் மற்றும் டப்பிங் உரிமைகளை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளார்.
மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘ப்ரதி பூவன்கோழி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பேருந்தில் வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு ஒரு ஆணால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல், அதை அப்பெண் எப்படி கையாளுக்கிறார் என்பதே இப்படத்தின் ஒருவரி கதை. “ஆர் உன்னியின் சங்கடம்” என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
தயாரிப்பாளர் போனி கபூர் “ப்ரதி பூவன்கோழி”யின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை வாங்கியுள்ளார். சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆன தென்னிந்திய படங்களின் ரீமேக் உரிமைகளை போட்டி போட்டு கொண்டு போனி கபூர் கைப்பற்றி வருகிறார்.
இப்படத்தை தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் போனி கபூர் இப்படத்தின் அனைத்து இந்திய மொழிகளிலும் படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமைகளையும் பெற்றுள்ளார். விரைவில் படம் எந்தெந்த மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
போனி கபூர் தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்துள்ளார். வலிமை படத்தை தயாரித்து வருகிறார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கோமாளி’ படத்தை தன் மகன் அர்ஜுன் கபூர் நடிப்பிலும், மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘ஹெலன்’ படத்தை தனது மக்கள் ஜான்வி கபூரை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்.