தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் இன்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரான ஆர் கே சுரேஷ், பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விஷால் – முத்தையா கூட்டணியில் வெளிவந்த ‘மருது’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது.
தற்போது இவர் ‘ஜோசப்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். 2018ம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான மலையாள படமான ‘ஜோசப்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை எம் பத்மகுமார் இயக்கியிருந்தார். மனிதர்களின் உடல் உறுப்புகளை திட்டமிட்டு திருடும் குற்றத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘விசித்திரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.சுரேஷ் கடினமாக உடற்பயிற்சி செய்து உடலமைப்பை மாற்றியுள்ளார். அந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ உடல் எடையை அதிகரித்துள்ளார். ஜோசப் படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமார் தான் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். இப்படதிற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.