தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால். தற்போது காடன், ஆரண்யா, ஜகஜ்ஜால கில்லாடி, எப்ஃ.ஐ.ஆர் மற்றும் மோகன் தாஸ் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் போட்டி போட்டு ரிலீஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் திரையுலகில் நுழைந்த 11 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
“நான் சினிமாவுக்குள் நுழைந்த 11 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறியுள்ளன. பட வெளியீட்டிலிருந்து டிஜிட்டல் சினிமாவுக்கும், இணை இயக்குநர்களிலிருந்து குறும்பட இயக்குநர்கள் வரை அறிமுகமாகி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரைத்துறையில் ஆதிக்க செலுத்துவதாகட்டும், கமர்ஷியல் படங்களிலிருந்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களுக்கு மாறுவதகாட்டும், பெரிய திரையிலிருந்து மொபைல் திரைகளுக்கு மாறியதாகட்டும், இயக்குநர் நடிகர்களாகவும், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறியதாகட்டும். கொரோனா வைரஸ் காரணமாக ஓடிடி தளத்தால் உலக சினிமா பரவலாக்கப்பட்டு விட்டது. வேறெந்த பத்தாண்டுகளும் இந்த அளவு மிகப்பெரிய மாற்றங்களைப் பார்த்திருக்க முடியாது. இறுதியாக, மாற்றம் ஒன்றே மாறாதது. ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள். அது மட்டுமே ஒரே வழி” என தெரிவித்துள்ளார்.