நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘க/பெ ரணசிங்கம். பெ.விருமாண்டி அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்கிறார்.
பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள பெரிய கருப்பத்தேவரின் மகன் தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு அரசு அதிகாரியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் படம் ஓடிடி தளமான ஜீ ப்ளக்ஸில் வெளியாகயுள்ளது என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இது திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் வெளியாகும் முதல் தமிழ் படமாக அமைந்துள்ளது.
மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று 5 இந்திய மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘க/பெ ரணசிங்கம்’ வெளியாகும் என்றும் 10க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில் சப்-டைட்டில் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் “டிடிஎச் மற்றும் ஓடிடி தளத்தில் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகவுள்ளது” என்று கூறி ஜீ பிளக்ஸ் நிறுவனத்தை டேக் செய்துள்ளார்.150 நாடுகளில் ஒரே சமயத்தில் ஜீ பிளக்ஸ் ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் ‘க/பெ ரணசிங்கம்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.