‘பொறியாளன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருகிறார். அதிகப் பெண் ரசிகர்களை கவர்ந்துள்ள ஹரிஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறியுள்ளார்.
‘பியார் பிரேமா காதல்’ படம் இவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். கடைசியாக ‘தாராளபிரபு’ படத்தில் நடித்திருந்தார். விவேக் மற்றும் ஹரிஷ் கல்யாண் காம்போ ரசிகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்போது ஹரிஷ் கல்யாண் சசி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசி தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்கமுடியாத இயக்குனர். ‘சொல்லாமலே’, ‘பூ’, ‘டிஷ்யூம்’ படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘பிச்சைக்காரன்’ படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இயக்குனர் சசி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரை வாழ்த்திய ஹரிஷ் கல்யாண் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி சார் .. உங்கள் படங்களைப் பார்த்து வளர்ந்த நான், இப்போது உங்கள் அடுத்த படத்தில் உங்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி மற்றும் படப்பிடிப்பைத் தொடங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான “பெல்லி சூப்புலு” படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரியா பவானி ஷங்கர் உடன் இணைந்து நடித்துள்ளார்.