நேற்று நடிகர் ஜெயம் ரவி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இயக்குநர் எம்.ராஜாவின் தம்பியும், அனைவருக்கும் நன்கு அறிமுகமான எடிட்டர் மோகனின் மகனுமாகிய நடிகர் ஜெயம் ரவி, 2002ம் ஆண்டு ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின் பல வெற்றிப் படங்களை தந்துள்ளார். சமீபத்தில் வெளியான “கோமாளி” திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 42 கோடிக்கு மேல் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
நேற்று பிறந்த நாளை கொண்டாடிய இவருக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி.
அதில், “இந்த இக்கட்டான காலகட்டத்திலும் என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய திரைத்துறை நண்பர்கள், மீடியா நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக காமன் டி பி , வீடியோ மாஷ் அப், ஓவியம், மோஷன் போஸ்டர், கானா பாட்டு இன்னும் பல வழிகளில் வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு என் அளவில்லாத நன்றி.
இரத்த தானம், காவலர்களுக்கு முக கவசம், இயலாதவர்களுக்கு உதவி போன்ற நற்செயல்களை செய்தவர்களுக்கு நன்றியைத் தாண்டியும் பெரும் கடமைப்பட்டுள்ளேன்.என் வேண்டுகோளுக்கிணங்க கூட்டம் சேராமல் தனி ஒருவனாக நின்று இவற்றையெல்லாம் செய்து உங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்கள் அன்பில் திக்குமுக்காடினேன்
இதற்கு என்ன கைமாறு செய்வேன் என அறியேன் !!!. நல்ல படங்கள் மூலமாக தான் ரசிகர்களாக நீங்கள் கிடைத்தீர்கள். அதை தக்க வைப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன்.” இப்படிக்கு “என்றும் நன்றியுடன் ” ஜெயம் ரவி”
என்று கூறியுள்ளார்.