கொரோனா காலகட்டத்தில் கூட உலக அளவில் பொதுமக்கள் அதிகமாக கூடும் மால்கள், பீச், பார்க், திரையரங்குகள் போன்ற முக்கியமான இடங்கள் கடந்த நான்கு மாதங்களாக மூடியே உள்ளனர். இதனால் புதிதாக வெளியாக காத்திருந்த பல திரைப்படங்கள் ரிலீஸ் தள்ளி போயின. சில படங்கள் ஓடிடி தளங்களிலும் வெளியாகி வசூலை எடுக்கின்றன். சில சர்வதேச நாடுகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று குறைந்துள்ள சில நாடுகளில் ‘எக்ஸ் மென்: தி ந்யூ ம்யூடண்ட்ஸ்’, க்றிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ ஆகிய படங்கள் வெளியாகின. வெளியான அனைத்து நாடுகளிலும், ‘டெனெட்’ படத்திற்கு வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரிட்டன், கனடா, தென் கொரியா உள்ளிட்ட 41 நாடுகளில் வெளியாகியுள்ள ‘டெனெட்’ திரைப்படம் ஐந்தே நாட்களில் 53 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. இது தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகை என வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் ‘டெனெட்’ திரைப்படம் வெளியானது. வெளியான முதல் வாரத்திலேயே 78.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளது. இப்படம் இதுவரை வசூலித்துள்ள மொத்த தொகை 146.2 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.1000 கோடி)
இந்த வாரம் ‘டெனெட்’ படம் இஸ்ரேல், கத்தார் ஆகிய நாடுகளிலும் அடுத்த வாரம் ஜப்பான், மெக்ஸிகோ ஆகிய நாடுகளிலும் வெளியாகிறது.
200 மில்லியன் பட்ஜெட் செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் இந்த இக்கட்டான சூழ்நிலை முடிந்து வெளியானால், 500 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும் என கூறப்படுகிறது.