பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தான் “பிக் பாஸ்”.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலுமே அந்தந்த மொழி சினிமா பிரபலங்களால் தொகுத்து வழங்க ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் இதுவரை 3 சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நான்காம் சீசனை எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ஸ்தம்பித்தது. இதனால் அனைத்து மொழி திரைத்துறையினருமே படப்பிடிப்புகள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தினசரி தொழிலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நான்கு மாதங்களுக்கு பிறகு, மாநில அரசின் அனுமதியோடு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சில தினங்களுக்கு முன் தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் வேலையை தொடங்க தயாராகிவிட்டேன், நீங்களும் உங்களது வேலையை செய்யத் தயாராகுங்கள்” என கூறி விரைவில் பிக் பாஸ் தமிழ் 4 ஒளிபரப்பாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.
மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4ம் சீசனை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 05) விஜய் தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் ‘சொன்னபடி கேளு. சொல்லுறது பாஸ்.’ என்ற வரிகளைக் கொண்ட பாடல் இடம்பெற்றுள்ளது. அதற்கு உலகநாயகன் அவர்கள் நடனத்தில் அசத்தி தனக்கே உரித்தான கம்பீர குரலில் ‘தப்புன்னா தட்டி கேட்பேன்.. நல்லதுன்னா தட்டி கொடுப்பேன்.. விரைவில் பிக் பாஸ் 4 என கூறியுள்ளார். 65 வயதில் இவ்வளவு கம்பீரமாக, இளமையாக உள்ளார் என ரசிகர்கள் வியப்புடன் உள்ளனர்.
இந்த ப்ரோமோவை பார்த்து வியந்த ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் “பிக் பாஸ் தமிழ் 4″ன் ப்ரோமோவிற்கு இசையமைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்த ப்ரோமோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். மேலும் போட்டியாளர்களை பற்றிய அறிவிப்பு இதுவரை வெளிவராதலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.