கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. தமிழில் முதல் படமாக நடிகை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் சில படங்கள்
ஓடிடி தளத்தில் வெளியானாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் “நான் ஈ” படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நானியின் 25வது படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நானி நடிப்பில் தற்போது ‘வி’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் என பலர் நடித்துள்ளனர். இதில் நானி முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் நானி டீவீட் செய்துள்ளார். அதில் “கடந்த 12 ஆண்டுகளாக எனது படங்களைக் காண ரசிகர்கள் டிக்கெட்கள் எடுத்து திரையரங்கிற்கு வந்தீர்கள். இப்போது நான் உங்களுடைய வீட்டிற்கே வந்து நன்றி கூறவுள்ளேன்” என கூறியுள்ளார். “வி” திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகிறது.