தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா செட்டி. இவர் நடிப்பில் ஒரு சில படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழிமாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு வெளியான “சூப்பர்” என்கிற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதன் பின்னர் 2006ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த “ரெண்டு” படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். வரிசையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
2009ம் ஆண்டு வெளியான “அருந்ததி” படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மார்க்கெட்டின் உச்சிக்கே சென்றார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அருந்ததி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். தமிழ்நாட்டு விநியோக உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிட்டது. அதுவரை வெளிவந்த அனைத்து தெலுங்கு சினிமா வசூலையும் தமிழ்நாட்டில் முறியடித்தது. அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் தெலுங்கு சினிமாவிற்கு மார்க்கெட் மிக பெரிதாக விரிந்தது.

அதன் பின்னர் 2009ம் ஆண்டு வெளியான “வேட்டைக்காரன்” என்கிற படத்தில் இளைய தளபதி விஜய்க்கு கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக விருப்பமான நாயகி என்ற விருது பெற்றிருந்தார். அதன்பின்னர் சூர்யாவுடன் சிங்கம், சிம்புவுடன் வானம், விக்ரமுடன் தெய்வத் திருமகள், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், ரஜினியுடன் லிங்கா, அஜித்துடன் என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். 2015ம் ஆண்டு “பாகுபலி “படம் இவருக்கு இன்னும் பக்கபலமாக அமைந்தது.
இந்த நிலையில் 2009ம் ஆண்டில் அனுஷ்கா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான படம் “அருந்ததி”. தற்போது அந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த படத்திற்கான இந்தி ரீமேக் உரிமையை அல்லு அரவிந்த் மிக பெரிய விலைக்கு வாங்கியுள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்று பல கேள்விகள் எழுப்பி வந்தன. அனுஷ்கா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.