இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வந்தார். ஆனால் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய இயக்குநராக நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்த்துக்கு இதில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இளையராஜா – பிரசாத் ஸ்டுடியோ இடையேயான சமரச பேச்சு தோல்வி அடைந்த நிலையில், வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இசையமைப்பாளர் இளையராஜா காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில்
“1976ம் ஆண்டு முதல் நான் பல மொழிகளில் 1300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், 7000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்த புகழ்பெற்ற இசை இயக்குனர்.
முதலில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் திரு. எல்.வி.பிரசாத் என்பவருக்கு சொந்தமானது. எனது திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக அவர் எனக்கென்று ஒரு ஸ்டூடியோ வழங்கினார். எந்தவித இடையூறும் பிரச்சனையும் இன்றி சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு முழு அனுமதி அளித்துள்ளார்.
பல உயர் மதிப்புள்ள உபகரணங்கள், இசைக்கருவிகள், கையால் எழுதப்பட்ட இசைக் குறிப்புகள் என நான் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஸ்டூடியோ நடத்தி வருகிறேன்.
செப்டம்பர் 2019 முதல் வாரத்தில், திரு. ரமேஷ் பிரசாத்தின் மகன் திரு. சாய் பிரசாத், நிறுவனத்தின் பிரசாத் ஸ்டுடியோஸ் / பிரசாத் டிஜிட்டல் ஸ்டூடியோவின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்ட பிறகு, சட்ட விரோதமாக மின்சாரம், நீர் மற்றும் பிற வசதிகளை துண்டித்து விடுவதாக அச்சுறுத்தினர். அவர்கள் என்னை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர்.
வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஸ்டூடியோவில் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், விலை மதிப்பற்ற எனது சில பொருட்களையும், நான் எழுதி வைத்திருந்த மியூசிக் நோட்ஸ்களையும் அகற்றி விட்டதாக” அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.