இயக்குனர் மகேந்திரன் 1939ம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். இவரது தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர் மற்றும் தாயார் மனோன்மணி கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.தனது பள்ளிப்படிப்பை இளையான்குடியில் முடித்த மகேந்திரன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “இண்டர்மீடியட்” படித்தார். அதன் பின் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் “பி.ஏ” பொருளாதாரம் படித்தார்.
1958ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார். மகேந்திரன் மேடை பேச்சை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், மகேந்திரனை வாழ்த்தி எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே பத்திரிகை ஒன்று நடத்தி வந்தார். இதுமட்டுமின்றி கல்லூரி நாடகங்களிலும் கலந்து கொள்வார்.
பின் சட்ட கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அவ்வப்போது சினிமா விமர்சனமும் எழுதினார்.
அப்போது நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்றுருந்தார். அவரைப் பார்த்த புரட்சி தலைவர், “நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே, நாளை என் வீட்டிற்கு வாருங்கள். நல்ல வேலை தருகிறேன்” என்றார்.
மறுநாள் காலை எம்.ஜி.ஆர். வீட்டுக்கு மகேந்திரன் சென்றார். அப்போது “பொன்னியின் செல்வன்” நாவலை திரைக்கதை எழுத சொன்னார் எம்.ஜி.ஆர். பின் ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர். “காஞ்சித் தலைவன்” படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.1966-ம் ஆண்டு “நாம் மூவர்” என்ற படத்திற்கு முதன்முறையாக மகேந்திரன் கதை எழுதினார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து “சபாஷ் தம்பி”, “பணக்காரப்பிள்ளை” , சிவாஜி கணேசன் நடித் “நிறைகுடம்” என பல வெற்றி படங்களுக்கு கதை எழுதினார். “தங்கப்பதக்கம்” படத்திற்கு கதை-வசனம் எழுதினார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து “திருடி” என்ற படத்திற்கு கதையும், “மோகம் முப்பது வருஷம்” படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன். ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை மற்றும் வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) என பல படங்களுக்கு கதையும் எழுதினார் மகேந்திரன்.
மகேந்திரன் முதன்முறையாக திரைக்கதை, வசனம், எழுதி இயக்கிய திரைப்படம் “முள்ளும் மலரும்” . படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது வாங்கியது. கதை-வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார்.
அதன்பின் “உதிரிப்பூக்கள்”, “பூட்டாத பூட்டுக்கள்” , “நெஞ்சத்தைக் கிள்ளாதே” போன்ற பல படங்களை இயக்கினார். தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன்
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 1980ல் வெளியான “ஜானி” படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை படத்தை எடுத்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த பெரிய நட்சத்திரம் அவரே. “மெட்டி”, “நண்டு”, “எனக்கு நானே எழுதிக்கொண்டது” போன்ற புத்தகங்களை மகேந்திரன் எழுதியுள்ளார். “உதிரிப்பூக்கள்” படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் புத்தகமாக வெளிவந்துள்ளது.
12 படங்கள் இயக்கிய அவர் முதன்முறையாக 2016ம் ஆண்டு தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் போன்ற தமிழ் படங்களிலும் கட்டமராயுடு என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். மகேந்திரன் மகன் ஜான் தளபதி விஜய் நடித்த “சச்சின்” படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இயக்கிய திரைப்படங்கள் :
1978: முள்ளும் மலரும்
1979: உதிரிப்பூக்கள்
1980: பூட்டாத பூட்டுகள்
1980: ஜானி
1980: நெஞ்சத்தை கிள்ளாதே
1981: நண்டு
1982: மெட்டி
1982: அழகிய கண்ணே
1984: கை கொடுக்கும் கை
1986: கண்ணுக்கு மை எழுது
1992: ஊர்ப் பஞ்சாயத்து
2006: சாசனம்