2011 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி, ராணா படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
பிறகு அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய தலைவர், பூரண ஓய்வெடுத்து வந்தார். அப்போது திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து,மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விருந்தினர்களின் வருகையை தவிர்க்கும் பொருட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது . நியூஸ் சானல்கள் “ரஜினி மருத்துவமனையில் மீண்டும் அனுமதி” என்று செய்தியை பிளாஷ் செய்ய துவங்கின. இந்த செய்தி ரசிகர்களிடையே காட்டுதீ போல பரவி, அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஏன் ராமச்சந்திராவில் அனுமதி?
ஏற்கனவே சிகிச்சை பெற்ற இசபெல்லா, மற்றும் அப்பல்லோ இருக்கையில், ஏன் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு செல்லவேண்டும்? என்று சிலர் கேள்வியை எழுப்பினர் .ராமச்சந்திரா மருத்துவமனை மட்டுமல்ல. அது நவீன வசதிகள் கொண்ட ஒரு மருத்துவப் பல்கலைகழகம். (Medical University). மேலும் அதன் சேர்மன் வெங்கடாச்சலம் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர்.அதனால் ராமச்சந்திரா மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது.
நேஷனல் மீடியா மற்றும் ரீஜினல் மீடியா ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தலைவர் ரஜினிகாந்தை காண வரும் முக்கிய பிரபலங்கள் மற்றும் அவரது உடல் நலம் முன்னேற்றம் பற்றிய தகவல்களை LIVE COVERAGE வாகனத்தை மருத்துமனைக்கு முன்பாக நிறுத்தி லைவ் அப்டேட்ஸ் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், ராமச்சந்திராவில், முன்னாள் முதல்வர் கலைஞர் சிகிச்சை பெற்ற அதே அறையில் சிறப்பு வார்டில் தங்கியுள்ள சூப்பர் ஸ்டாருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. (கவலைப்படும் படி ஒன்றுமில்லை என்று ரிசல்ட் வந்தது.) விரைவில் ராமச்சந்திராவிலிருந்து வீடு திரும்பியவுடன், கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்று அவர் ஓய்வெடுக்க்கூடும் என்று குடும்பத்தினர் சிலரால் கூறப்பட்டது .
மேலும் ராமச்சந்திரா மருத்துவமனை அன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது :
தனது வார்டில் சூப்பர் ஸ்டார் உற்சாகமாக இருப்பதாகவும், டி.வி. சானல்கள் குறிப்பாக செய்தி சானல்களை விரும்பி பார்ப்பதாகவும் ,செய்தித் தாள்களையும் விரும்பி படிக்கிறார். மருத்துமனையில் சின்ன சின்ன வேலைகளை அவரே செய்துகொள்கிறார். அதற்க்கெல்லாம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை.தனது நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் அவ்வப்போது போன் செய்து பேசுகிறார். ரசிகர்களின் உணர்வுகளையும் கேட்டு தெரிந்துகொள்கிறார். விரைவில் அவரிடமிருந்து நேரடி அறிக்கை/தகவல் வரக்கூடும்” என குறிப்பிட்டு இருந்தது.
அந்த சமயத்தில் தலைவர் ரஜினியின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு லதா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் பதிலளித்து பேசியது ரசிகர்கர்களுக்கு உற்சாகத்தை தந்தது .
‘தலைவருக்காக இயக்குனர் சங்கத்தின் கூட்டுப் பிரார்த்தனை:
இயக்குனர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கமலா திரையரங்கில் திங்களன்று (23/05/2011) கூடியது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெறவேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இயக்குனர்கள் சங்க வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற பிரார்த்தனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனையிலிருந்து விசேஷ ஆம்புலன்சில் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். நூற்றுகணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்து அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.
ரசிகர்களுக்காக தலைவர் அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரையாடல் மீடியாக்களுக்கு சௌந்தர்யாவால் அனுப்பப்பட்டது.அந்த ஆடியோவில் தலைவர் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பது நம் அனைவருக்குமே தெரிந்தது .
தலைவர் ஆடியோ பேச்சு:
ஹலோ…. நான் ரஜினிகாந்த் பேசுறேன்.
நான் HAPPY a போயிட்டு வந்துகிட்டு இருக்கேன் கண்ணுங்களா …
நீங்கள் என் மேல காட்டுற அன்புக்கு நான் என்னத்தை திருப்பி கொடுக்கிறது…பணம் வாங்குறேன்… ஆக்ட் பண்ணுறேன்… அதுக்கே நீங்க என் மேல் இவ்வளவு அன்பு கொடுக்குறீங்கன்னு சொன்னா… உங்களுக்கு DEFINITE ஆ நீங்கள் எல்லாரும் என் ஃபான்ஸ் எல்லாரும் THROUGH OUT THE WORLD தலை நிமிர்ந்து நடக்குற மாதிரி ஏதாவது செய்றேன்… கண்ணா…கடவுள் கிருபை எனக்கு இருக்கு… குருவோட கிருபை எனக்கிருக்கு… எல்லாத்துக்கும் மேல என் கடவுள் போன்ற உங்கள் கிருபை எனக்கு இருக்கு… நான் சீக்கிரம் வருவேன்… ஓகே. . பை… குட்…
இந்த உரையாடலை கேட்டபிறகு, கண்களில் நீர் வராத ரசிகர்களே இருக்க முடியாது…
ராமச்சந்திராவிலிருந்து தலைவரை டிஸ்சார்ஜ் செய்து சிங்கபூருக்கு அழைத்துப்போவது என முடிவு செய்யப்பட்டவுடனேயே ரசிகர்கள் பலருக்கு, “ஏன் சிங்கப்பூர்? இங்கு இல்லாத மருத்துவ வசதியா? சிங்கப்பூருக்கு கொண்டுபோகுமளவிற்கு சீரியஸா?” என்றெல்லாம் சந்தேகம் தோன்றியது.
ராமச்சந்திராவில் அட்மிட் செய்யப்பட்டபிறகு , அவருக்கு இருந்த நுரையீரல் நீர்கோர்ப்பு பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவை மெல்ல மெல்ல குணப்படுத்தப்பட்டது. ஆயினும் சிறுநீரகத்தின் செயல்பாடு மட்டும் திருப்திகரமாக அதில் ஒரு ஒழுங்கின்மை நிலவியது. அடிக்கடி பல மணிநேரம் டயாலிசஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதற்கு மேல் பொறுத்திருந்து, சிறுநீரகத்தில் பெரிய பிரச்னை என்றால், அதை இங்கு சரி செய்வது கஷ்டம். எனவே, சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் அமிதாப்பின் ஆலோசனையின் பேரில் தலைவரை சிங்கப்பூர் அழைத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எளிசபெத் மருத்துவமனையில் இதை தொடர்ந்து அவர் சேர்க்கப்பட்டார். அனைத்து ஏற்பாடுகளும் அங்கு தயாராக இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் சென்றவுடன் அவரை விஷேஷ அறையில் வைத்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்
சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தலைவர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், எனினும் சிங்கப்பூரில் சில காலம் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் அவரது மருமகன் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நல்ல செய்தியை முதலில் தெரிவித்தது அவரே.
“ஜென்ம ஜென்மத்துக்கும் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” – ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து தலைவர் தன் கைப்பட உருக்கமான கடிதம்!
வாழ்க்கை என்ற விளையாட்டில், காசை மேலே சுண்டிவிடுவது தான் மனிதனின் வேலை, அது கீழே விழும்போது, பூவா, தலையா என்பதை ஆண்டவன் முடிவு செய்கிறான். என் வாழ்க்கையில், பணம், மருந்து, அறிவியல், சிறந்த மருத்துவர்கள் என, ஒரு புறம் எனக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மற்றொரு புறம், சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் செய்தும், உண்ணாவிரதம் இருந்தும் நான் நலமடைய என் ரசிகர்கள் செய்த வேண்டுதலும், என் மீது அவர்கள் காட்டிய அன்பும் தான், என்னைக் காப்பாற்றி உள்ளது., ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள் .ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன் .நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை. “ராணா’ படம் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பேன். அது தான் என் லட்சியம். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
டாக்டர்களின் தீவிர சிகிச்சையினாலும், ரசிகர்கள் பிரார்த்தனையாலும் தலைவர் ரஜினிகாந்தின் உடல்நிலை தேற தொடங்கியது.
அவர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை திரும்புவதற்கு டாக்டர்கள் அனுமதித்தார்கள்.
46 நாட்கள் சிங்கப்பூரில் இருந்த ரஜினிகாந்த், சென்னைக்கு திரும்பலாம் என்றதும் உற்சாகம் அடைந்தார். இந்திய நேரப்படி, மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் சென்னைக்கு புறப்பட்டார்.
ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்து சென்னை திரும்புகிற தகவல் பரவியதும், சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தார்கள். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி, வாழ்த்து அட்டைகளை பிடித்தபடி நின்றார்கள். அவர்களிடம் இருந்து ரஜினிகாந்த் பிரியாவிடை பெற்றார்.
ரஜினிகாந்த் பயணம் செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது. ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் வந்தனர்.
விமானத்தில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், விமான நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ்சில் வந்தார். ஊதா நிற ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்து இருந்தார்.
ரஜினிகாந்தை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். மினி பஸ்சை விட்டு இறங்கிய ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார். ரசிகர்களை நோக்கி கை அசைத்த படி வந்த அவர், பின்னர் இரு கைகளையும் குவித்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
அப்போது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் ரஜினிகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.“எங்கள் பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்து விட்டது. தலைவர் நூறு வருடங்கள் வாழ்வார்” என்று சில ரசிகர்கள் கண்ணீர் மல்க கோஷம் எழுப்பினார்கள்.பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்கவும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டமும் இடம் பெற்றது.
ரசிகர்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், கை அசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி தனது காரில் ஏறி, விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
ரஜினிகாந்த் வருகையையொட்டி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரஜினிகாந்தை வரவேற்றும், வாழ்த்தியும் அவருடைய ரசிகர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகரம் முழுவதும் வழிநெடுக பேனர்களும், வரவேற்பு வளைவுகளும் அமைத்திருந்தார்கள். அவைகளை எல்லாம் பார்த்து ரஜினிகாந்த் நெகிழ்ந்து போனார்.
சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கேளம்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் சில வாரங்கள் ஓய்வு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
2011 ஜூலை 13 ஆம் தேதி தலைவர் ரசிகர்களுக்கு தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நாள் . மரணத்தை வென்று சிங்கநடை போட்டு சென்னை திரும்பிய நாள் .