V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர்ஸ்டார் ரஜினியின் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தால் உருவானது "முள்ளும் மலரும்"

சூப்பர்ஸ்டார் ரஜினியின் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தால் உருவானது “முள்ளும் மலரும்”

வழக்கமான நமது அன்றாடப் பணிகளை இந்த முழு ஊரடங்கு முடக்கியிருப்பது உண்மைதான் என்றாலும், ஆக்கப்பூர்வமான சில செயல்கள் இதனால் பாதிக்கப்படாது என்பதும் நிதர்சனம்தான். விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் உட்பட பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்த சில கடந்த காலப் படங்களின் விளம்பர டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. வேறு விதத்தில் சொல்வதென்றால் அரிதான முத்தாக அமைந்த சில தமிழ் படங்களின் விளம்பர வடிவமைப்பை தன் ஆக்கப்பூர்வ திறனால் மேலும் அழகு படுத்தியிருக்கிறார் கோபி பிரசன்னா என்று கூறலாம்.

​    

இது குறித்து விவரி்த்த கோபி பிரசன்னா “பழைய படங்களுக்கு டிசைன் செய்யும் பணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனின் ‘ராஜ பார்வை’ படத்திலிருந்து தொடங்கியது. கமல் சாரிடமிருந்து இதற்குக் கிடைத்த பாராட்டு, மறக்க முடியாத தருணமாக எனக்கு அமைந்ததுடன் மேலும் இது போன்ற படங்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் சிறுகச் சிறுக என்னுள் விதைத்தது. சற்று அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்ட இந்தப் பணிகள், உலகளாவிய நெருக்கடி பரவிய காலம்வரை நீடித்தது. ஆரம்பகால நாட்கள் ஆர்வத்தைத் தந்தாலும், சில வாரங்களுக்குப் பின் நெருக்கடி தந்த இந்த எதிர்மறை நிலையிலிருந்து வெளிவர தீவிரமாக முயன்றேன். இதன் பிறகு நாளொன்றுக்கு இரண்டு மூன்று போஸ்டர்கள் வீதம், உருவாக்கி பத்து படங்கள்வரை முடித்தேன். நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும் சாதகமான சூழ்நிலையை இது உருவாக்கவே, திரைப்பட இயக்குநர்களும், திரைத்துறையில் உள்ள நண்பர்களும் என்னை வாழ்த்தினார்கள்” என்றார்.

​  

கடந்த காலப் படங்களுக்குப் பணியாற்றுவது குறித்து விவரித்த கோபி பிரசன்னா, “எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் துவக்கம்வரை கைகளிலேயே டிசைன்கள் உருவாக்கும் பணி நடைபெற்றது. மென் பொருள் இன்றி, சிற்பி செதுக்குவதைப்போல், கத்தரிக்கோலை கவனத்துடன் பயன்படுத்தி படங்களை வெட்டியெடுத்து நமது ஆக்கப்பூர்வமான திறமையைக் கொண்டு சுவரொட்டிகள் மட்டும் விளம்பரப் பதாகைகளை வடிவமைக்க வேண்டும். எனவே நான் தற்கால தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஏன் புதுமையாகப் படைக்கக்கூடாது என எண்ணினேன். ஒவ்வொரு படத்துக்கும் ஓர் ஆன்மா உண்டு. அதை நான் விளம்பர வடிவமைப்பு மூலம் வெளிக்கொணர முயல்கிறேன். உதாரணமாக ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் ரஜினி சாரின் முரட்டுத்தனமிக்க காளி கதாபாத்திரத்தால் கட்டமைக்கப்பட்டது. எனவே நான் குறிப்பிட்ட வடிவமைப்பிலும் வண்ணங்களிலும் இதை செய்திருந்தேன். தற்போதைய தலைமுறை ரசிகர்களும் இதை புரிந்து கொண்டு பாராட்டுவதுடன் படத்தைப் பார்க்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார் கோபி பிரசன்னா.

Most Popular

Recent Comments