கொரோனா ஊரடங்கு பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலையை தொடங்குவதற்கான நிவாரண பொருட்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி அவர்களால் 2600 குடும்பங்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில், இந்நிகழ்ச்சி துவக்க விழா சோளிங்கர் வாசவி திருமண மண்டப வளாகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில், மாவட்ட இணை செயலாளர் ஆர்.நீதி (எ) அருணாச்சலம் அவர்கள் முன்னிலையில், சோளிங்கர் வட்டாட்சியர் பாஸ்கர் அவர்களும், சோளிங்கர் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் அவர்களும், துணை ஆய்வாளர்கள் மஹாராஜா மற்றும் பாஸ்கர் அவர்களும், சோளிங்கர் அரசு மருத்துவமனை தலைமை மேலாளர் Dr.இளங்கோவன் அவர்களும், சோளிங்கர் தேர்வுநிலை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வடிவேல் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், நாதஸ்வரம்/தவில் கலைஞர்கள், கிராமிய நாடக கலைஞர்கள், சலவை தொழிலாளர்கள், அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் டோலி தொழிலாளர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 550 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின் போது சோளிங்கர், காவேரிப்பாக்கம், நெமிலி ஆகிய ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக அரசு அறிவித்துள்ளபடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெர்மோமீட்டர் மூலம் வெப்ப பரிசோதனை செய்து, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, முக கவசம் அணிய வைத்து சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய வட்டாட்சியர், அரசு மருத்துவமனை தலைமை மேலாளர், காவல் ஆய்வாளர் அவர்கள் அரசு அறிவித்துள்ளது போல விழிப்புடன் செயல்பட ஆலோசனைகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி அவர்கள் பேசியதாவது. இப்போ இங்கே நான் உங்கள் முன் நிற்பதற்கு தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தான் காரணம். ஏனென்றால் இந்த கொடிய கொரோனா பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் மக்கள் தலைவர் வழிகாட்டுதல் படி தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்களும், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அது போலவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, மண்டல நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் நான் மட்டும் தாமதமாக நற்பணிகள் மேற்கொள்வதற்கு காரணம் சிறு வியாபாரியாக இருந்தாலும், உங்களை போலவே நானும் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டேன். அதன் வலியையும் உணர்ந்தேன், இந்நேரத்தில் நமக்கே இப்படி இருக்கிறதென்றால் தின கூலி வேலை செய்யும் அடித்தட்டு மக்களின் நிலை எண்ணி பலமுறை அழுதும் இருக்கின்றேன்.
நான் கொடுக்கும் இந்த உதவி பெரிதல்ல இருப்பினும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஒரு வேளைக்காவது எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தான் இப்போ இதை செய்கிறேன். பொருளாதாரத்தை சேர்த்து வைக்கவில்லை என்றாலும் என் தலைவரின் ஆசீர்வாதமும், உங்களின் அன்பையும் சம்பாதித்து வைத்துள்ளேன். அது போதும் எனக்கு. தயவுசெய்து சொல்கிறேன் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் சொல்வது போல ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு. அதனால வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியுடனும் இருங்கள், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி நம் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ளவும் என உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.