கீர்த்தி சுரேஷின் குழந்தையை யாரோ ஒருவர் கடத்தி சென்றுவிட, கடத்தியது யார் என்று தேடி செல்லும்போது தான் தெரிய வருகிறது, கடத்தியவன் கொடூரமான சைக்கோ என்று. அதன்பின் என்ன நடந்தது என்பது தான் ‘ ‘பெண்குயின்’படத்தின் ட்ரெய்லரில் கூறியுள்ள ஒன்-லைன்.
இருள் சூழந்த மலை பகுதியில் முகமூடி அணிந்த ஒருவர் மஞ்சள் நிறக்குடையுடன் நீர்நிலைக்குள் நடந்து செல்வதாக ட்ரைலர ஆரம்பமாகிறது. தன் குழந்தைக்கு உணவு ஊட்டும் கீர்த்தி அடுத்த காட்சியில் ‘அஜய்’என்று உரக்க அலறுகிறார். தொடர்ந்து ‘அஜய் பத்தி எதுவும் தெரிஞ்சுதா’ என்று கீர்த்தி சுரேஷ் யாரிடமோ கேட்க,‘இந்த காடு ஆயிரம் சதுரமீட்டர் பரவிக்கிடக்குது. இந்த காட்டுக்குள்ள போய்ட்டு வர்றதுக்கு நிறைய வழி இருக்கு. இதில எங்க போய் அவன தேடுறது?’ என பதில் கூறுகிறார்கள்.
குழந்தையின் செருப்பு, ரத்தக்கறை படிந்த உடை போன்றவை கிடைத்தும், குழந்தை இறந்து விட்டதாக போலீசார் கூறியும், தன் குழந்தை உயிருடன் இருப்பதாக கீர்த்தி சுரேஷ் உறுதியாக நம்புகிறார். அடர்ந்த காடு, ஆக்ரோஷமான தேனீக்கள், முகம் காட்டாத வில்லன், இருள் நிறைந்த சூழல் என்று 2.32 நிமிடங்கள் நீளமுடைய ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியும் திகிலூட்டுவதாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் மிரட்டியுள்ளார்.