கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் மூன்று மாதத்துக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. தமிழில் முதல் படமாக நடிகை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29-ஆம் தேதி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் ஜூன் 19 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ‘நிசப்தம்’ திரைப்படத்தையும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவான ‘நிசப்தம்’ என்ற திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.