கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார் பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். அதுமட்டுமின்றி தனது காப்பகத்தில் வளரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தனக்கு தெரிந்த மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடலை மிக அருமையாக வசித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அச்சிறுவனுக்கு அனிருத் இசையில் ஒரு நிமிடம் அதும் தளபதி விஜய் முன்னால் பாட வாய்ப்பு வாங்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை தற்போது தளபதி விஜய் மற்றும் அனிருத் ஏற்று கொண்டுள்ளனர். இது குறித்து நேற்று இரவு ‘தளபதி விஜய்’யிடம் ராகவா லாரன்ஸ் பேசிய போது ‘அந்த சிறுவனை ஊரடங்கு முடிந்த உடன் அழைத்து வரும்படியும் அந்த சிறுவனுக்கு கண்டிப்பாக அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஒரு ஏழை மாற்றுத்திறனாளி சிறுவனின் கனவு நனவாக போவதை அறிந்து நான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக தனது அன்னைக்கு கோயில் ஒன்றைக் கட்டி கொண்டு இருப்பதாகவும் அந்த கோயில் உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் அர்ப்பணிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அன்னையரை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும், பசித்த ஏழைகளுக்கு உணவு அளிப்பதன் மூலம் உண்மையான கடவுளை அனைவரும் காணலாம் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.