பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் சுப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். ராஜ் கபூர் இயக்கிய, ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பல பாலிவுட் படங்கள் ஹிட் அடித்தன. ஸ்ரீ 420 என்ற படத்தில் தனது 3 வயதில் நடிப்பை தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் ‘பாபி’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக 1974 ஆம் ஆண்டு சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றார். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார்.
ரிஷி கபூருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக நியூயார்க் சென்றிருந்தார். ஒரு வருடம் அங்கேயே தங்கி 2019 செப்டம்பரில் மும்பைக்கு திரும்பினார். மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் (வயது 67) காலமானார். அவரது இறப்பினால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
நேற்று தான் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல் நலக்குறைவால் காலமானார். அடுத்தடுத்து இரண்டு பிரபல பாலிவுட் நடிகர்கள் இறந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.