இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மே 03 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசிற்கு திரையுலகத்தை சார்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்தியாவிலே அதிக அளவில் நிதியுதவி கொடுத்த நடிகர் என்றால் அது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான். முதலில் பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார். அதன்பின் மும்பை மாநகராட்சிக்கு 3 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். தற்போது மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு 2 கோடி ரூபாய் என மொத்தம் 30 கோடி வாரி வழங்கியுள்ளார்.
மும்பை காவல்துறை அறக்கட்டளைக்காக அக்ஷய் குமாரின் ரூ.2 கோடி நன்கொடைக்கு, காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது. இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அக்ஷய் குமார், ‘கொரோனாவை எதிர்த்து உயிரிழந்த மும்பை காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள்கள் சந்திரகாந்த் பெண்ட்ரூகர் மற்றும் சந்தீப் சூர்வேவுக்கு என் வணக்கங்கள். நான் எனது கடமையை செய்திருக்கிறேன். நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் பாதுகாப்பாக, உயிரோடு இருப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்பதை மறக்க வேண்டாம்’ என கூறியுள்ளார்.