நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். முதல்முறையாக ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பொன்மகள் வந்தாள் உலகெங்கும் மார்ச் 28 ரிலீஸ் என இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். மே முதல் வாரத்தில் அமேசான் பிரைம்-ல் ரீலீசாகும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இப்படத்தை தயாரிப்பு செலவு 5 கோடி ஆனால் அமேசனிடம் 9 கோடிக்கு விற்றுள்ளார் சூர்யா. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன.
இச்செய்தியினால் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகர் சூர்யாவிடம் திரையரங்கில் வெளியிடாமல் அமேசனில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என கூறியும் அதை அவர் கேட்காத பட்சத்தில், திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றுகூடி முடிவு எடுத்துள்ளனர். அதில் “இனி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளிவரும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை’ என்கிற முடிவை எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படமான சூரரைப்போற்று படத்துக்குச் சிக்கல் என்கிறார்கள். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அனைத்தும் சுமுகமாக முடியும் என நம்புவோம்.