கொரோனா வைரஸ் தொற்றால் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த இக்கட்டான நிலையில் தினசரி வருவாய்யை நம்பி இருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள், உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரித் தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள் என பலரும் வருவாய் மற்றும் உணவின்றி தவிக்கின்றனர்.
(FEFSI) பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என திரையுலகினருக்கு பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து பிரபல நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி, பொருளுதவி அளித்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.
அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்தில் உள்ள 1000 பேருக்கு, ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி மூட்டை மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் அனுப்பியுள்ளார். நிவாரணப் பொருட்களை ஏப்ரல் 25,26,27 ஆகிய மூன்று தினங்களில் சாலிகிராமத்தில் அமைந்துள்ள செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை உறுப்பினர்கள் தங்களுடைய தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையுடன் நேரில் வருகை தந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தனர்.
இந்நிலையில் தான் செய்த உதவியை வெளிய சொல்ல வேண்டாம் என கூறியிருந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இதை மீறிவிட்டதாக இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் பேரரசு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது “ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம். இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது “பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்” என்ற நிபந்தனையோடு தான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படிச் சொல்லாதிருப்பது!” என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!
இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது “பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் “என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார்.
அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம்
பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது! pic.twitter.com/iGxCBF6F62— PERARASU ARASU (@ARASUPERARASU) April 23, 2020