மக்களின் நலனுக்காக இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் குடும்பங்களுடன் நேரம் செலவழிகாமல் அயராத உழைக்கும்
மருத்துவர்களுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோவில் “அனைவருக்கும் வணக்கம் ! நான் சிவகார்த்திகேயன் பேசுகிறேன். நிறைய பேருக்கு இந்த லுக்கில் அடையாளம் தெரியாது என்பதால் தான் பெயர் சொல்லி தொடங்கினேன். நிறையப் பேர் இந்த மாதிரி தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச காலம் இந்த வழிமுறைகள் எல்லாம் கடைபிடித்துவிட்டோம் என்றால், சீக்கிரம் இது முடிந்துவிடும் என நம்புகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வயதானவர்களையும், குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், ஊடகத்துறையினர் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருத்தருக்கும் நன்றி சொல்லத்தான் இந்த வீடியோ.
அவர்களுடைய உயிர், குடும்பம் என எதைப் பற்றியுமே யோசிக்காமல், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்காக வெளியே வந்து சேவை செய்யும் மனித கடவுள்களான மருத்துவர்களுக்குப் பெரிய நன்றி. அவர்களுக்கு என் சல்யூட். அவர்கள் மீது நமக்கு நிறைய அன்பு, மரியாதை இருக்கிறது என்பதற்காகத் தான் இந்த வீடியோ. அதற்காகவே #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த செய்திகள், சம்பவங்கள் அவர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கும். நமக்கும் இதைப் பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது.
இந்த கரோனாவை பற்றிப் பயப்படாமல் யோசிக்காமல் அவர்களுடைய வேலையை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிற மருத்துவர்கள், அவர்களுடைய செயல் மூலமாக நமக்காக இருக்கிறார்கள் என நிரூபித்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்காக நாங்க இருக்கிறோம் என்று சொல்கிற நேரம். நீங்களும் உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவை உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தோன்றுகிறதோ அந்த செய்தியை இந்த ஹேஷ்டேக்குடன் சேர்த்துப் பதிவிடுங்கள்.
இந்த ஹேஷ்டேக் மூலமாகவும் நமது அன்பும், மரியாதையும் அவர்களைப் போய்ச் சேரட்டும். இந்த தருணத்தில் அவர்களுக்குத் தேவை அது தான். அனைவருமே செய்வோம் என நம்புகிறேன். உலகின் தலைசிறந்த சொல் செயல். செய்து காட்டுவோம். We Love Doctors’ ” என கூறியுள்ளார்.