Review By :- V4umedia Team
Release Date :- 02/08/2019
Movie Run Time :- 2.3 Hrs
Censor certificate :- U
Production :- Shaman Pictures
Director :- P. Marimuthu
Music Director :- Ved Shankar Sugavan
Cast :- Shaman Mithru, Sathyakala, Sundarrajan
பி.மாரிமுத்து இயக்கத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா, சுந்தர்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தொரட்டி’ படத்தின் முன்னோட்டம். 1980களில் நடக்கும் கதை. ஷமன் மித்ருவின் தந்தை அழகு ஊர் ஊராக சென்று
ஆட்டு கிடை போடும் தொழில் செய்பவர். சொந்த ஊரோ வீடோ இல்லாமல் ஆட்டு கூட்டத்துடன் ஊர் ஊராக சென்று கிடை போடுவது அழகு குடும்பத்தின் வழக்கம். அழகுவின் தூரத்து சொந்தமான குமணனின் உதவியுடன் ஒரு ஊரில் கிடை போடுகிறார். குமணன் மகள் சத்யகலாவுக்கும் ஷமன் மித்ருவுக்கும் காதல் ஆகிறது.
அந்த ஊரில் திருடுவதையே வழக்கமாக வைத்திருக்கும் சுந்தர்ராஜ், சீலன், முத்துராமன் ஆகியோருடன் ஷமனுக்கு நட்பு ஏற்படுகிறது. குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி விடுகிறார். தவறான வழியில் சென்ற ஷமனை திருத்துவதற்காகவே பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை சத்யகலா திருமணம் செய்துகொள்கிறார். ஷமனால் அந்த 3 பேரின் நட்பை விட முடியவில்லை. கூடா நட்பின் காரணமாக ஷமனுக்கு என்ன ஆகிறது? அதற்கு அவர் கொடுக்கும் கூலி என்ன?
ஷமன் சத்யகலா திருமண வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே கதை.
ஆடு மேய்ப்பவர்களின் பின்புலத்தை மையமாக கொண்டு அவர்களது வாழ்வியலை அழகாக சொல்லும் படமாக தொரட்டி வந்துள்ளது. தொரட்டி என்பது அவர்கள் பயன்படுத்தும் குச்சி போன்ற ஒரு பொருள். பீரியட் படம், புதுமுகங்கள் இப்படி
இடர்பாடுகள் எத்தனையோ இருந்தாலும் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் அழகான ஒரு காவியத்தை பி.மாரிமுத்து கொடுத்துள்ளார்.
படம் பார்க்கும் உணர்வே எழவில்லை. பதிலாக அவர்களோடு வாழ்ந்த உணர்வு தான் ஏற்படுகிறது. படக்குழுவினருக்கு பாராட்டுகள். கதையின் நாயகனாக ஷமன் மித்ரு. சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். சத்யகலாவுடனான காதல், தந்தை மீதான பாசம், நண்பர்களுடனான கேளிக்கை என வாழ்ந்து இருக்கிறார். சத்யகலாவும் சிறப்பாக நடித்துள்ளார். பெண் பார்க்க குடிபோதையில் வந்த ஷமனை அவர் குளிப்பாட்டும் இடம் கைதட்டல்களை பெறுகிறது.
அழகு, ஜானகி, ஸ்டெல்லா, குமணன், விஜய் பாலாஜி என மற்ற அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே தெரிகிறார்கள். நண்பர்களாக வரும் 3 பேரும் சரியான தேர்வுகள். வில்லத்தனமான நடிப்பால் கவர்கிறார்கள். குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் அவரது அபார உழைப்பு தெரிகிறது. ஜெயசீலனின் கலை இயக்கம் 1980களை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளது. வேத் சங்கரின் இசையில் பாடல்களும் ஜித்தனின் பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.
சினேகனின் பாடல் வரிகளும் நம்மை கிராம வாழ்க்கைக்கே கொண்டு செல்கிறது. ராஜா முகமது படத்தொகுப்பும் சிறப்பு. சில காட்சிகளின் நீளம் மட்டும் சின்ன குறை. முதல் பாதியில் கலைப்படம் போல் நகரும் படம் இரண்டாம் பாதியில்
விறுவிறுப்பாக மாறுகிறது. கிராமத்து பின்னணியில் நம் பாரம்பரிய வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறது தொரட்டி. குடி பழக்கமும் தீய நட்பும் ஒருவர் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் என்பதற்கு சாட்சியாகி இருக்கிறது. இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு மிகவும் அவசியம்.
மொத்தத்தில் ‘தொரட்டி’ கொண்டாட வேண்டிய படைப்பு.