Review By :- V4u Media
Team Release Date :- 07/08/2019
Movie Run Time :- 2.38 Hrs
Censor certificate :- U/A
Production :- Zee Studios & Bayview Projects LLP
Director :- H. Vinoth
Music Director :- Yuvan Shankar Raja
Cast :- Ajith Kumar Vidya Balan Shraddha Srinath Abirami Venkatachalam Andrea Tariang
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளனர்.
தோழிகளாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங் ஆகிய மூவரும் அனைவரிடமும் யதார்த்தமாக பழகும் பெண்கள், இருப்பினும் இதனை பயன்படுத்தி இவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயல்கிறார்கள் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்களை தாக்கிவிட்டு தப்பி செல்லும் பெண்கள் மூவரையும் பழிவாங்கும் பொருட்டு அர்ஜுன் சிதம்பரம் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கடத்தி சென்று அவரை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குகிறார்.
பாலியல் செய்து துன்புறுத்திய அர்ஜுன் சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்கள் மிகவும் செல்வாக்கு நிறைந்தவர்கள். இவர்களை எதிர்த்து வழக்கு பதிவு செய்து நியாயத்திற்காக போராடுகிறார் ஷ்ரத்தா மற்றும் தோழிகள். இருப்பினும் வழக்கு பதிவு செய்த பெண்களின் மேலே குற்றச்சாட்டு திரும்பபட்டு அவர்கள் மிகவும் கொடுமையாக சித்தரிக்கப்படுகின்றனர்.
தனக்கு நடந்த அநீதியிக்கு நியாயம் கேட்டு வந்து இறுதியில் அவர்களே சிக்கி கொண்டு தவிக்கும் பெண்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக களமிறங்குகிறார் பரத் சுப்ரமணியம் எனும் வழக்கறிஞரான அஜித் குமார். இவரின் வாதத்தால் அந்த மூன்று பெண்களுக்கும் நீதி கிடைத்ததா? இல்லையா? என்பது தான் மீதி கதை.
அஜித் குமாரின் கம்பீரமான குரலும் தோற்றமும், ஒரு வழக்கறிஞர் கதாபாத்திற்கு சீராக பொருந்துகிறது. அந்த பெண்களின் கதையை கேட்டு உருகுவது, அவர்களுக்காக குரல் கொடுப்பது என அஜித் தனது இயல்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார். குறிப்பாக “அப்படி எல்லாம் நடக்காது. நடக்கவும் கூடாது” என்று அவர் சொல்லும் காட்சி பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு பெண்களின் மீது பழி போட கூடாது என உள்ளணர்வுடன் கூறுவதும் மாஸ். படத்தில் வரும் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் அன்பான கணவாராகவும், தவறு செய்பவர்களை படத்தின் ஒரே ஒரு சண்டைக் காட்சியில் அடித்து துவைப்பதும் என மிரட்டியிருக்கிறார்.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் அஜித்திற்குரிய காதல், ஆக்ஷன் என அனைத்தையும் வைத்திருப்பது படத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. நீதி கேட்டு வந்திருந்தாலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுவதுமாக வெளியேவும் சொல்ல முடியாமல் கூச்சம் ஒரு பக்கமும் , தன் மீதே பழிபோடும் சமூகத்தின் மீது கோபம் ஒரு பக்கம் என தனது நடிப்பால் ஷரத்தா ஸ்ரீநாத் படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
எதிர்தரப்பு வக்கீலாக வரும் ரங்கராஜ் பாண்டேவிற்கு இந்த படம் ஒரு நல்ல அறிமுகம். வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் தங்களின் நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கின்றனர் .
காட்சிகள் அனைத்தையும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒரு புறம் திறம்பட கையாண்டுள்ளார், மறுபுறம் படத்திற்கு உயிரூட்டும் விதமாக யுவனின் இசை அமைந்துள்ளது. படத்தில் இடம் பெரும் பாடல்களும் பின்னணி இசைகளும் படத்திற்கு மேலும் உயிர் தந்துள்ளது.
பாலியல் கொடுமைகள் அதிகம் நடந்து வரும் இது போன்ற சூழ்நிலையில், இந்த படம் வெளியானது படத்தின் பிளஸ். மேலும் பெண்களை சித்ரவதை செய்து அவர்களை துன்புறுத்தி பாலியல் கொடுமை செய்யும் ஆண்களை விடுத்து பெண்களின் மீது பழி போடும் சமூகத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறது ‘நேர்கொண்ட பார்வை’.
படத்தின் முக்கிய கருத்தே பாதிக்கப்படும் பெண்கள், எதிர்த்து போராட வேண்டும் என்றும், தவறு செய்யும் ஆண்கள் தண்டிக்க படவேண்டும் என்றும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களை வார்த்தைகளால் வதைக்கும் சமூகத்தை சாடியும் இந்த படம் உருவாகியுள்ளது.
பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நடப்பின் தவறை பெண்களின் மீது போடாமல் ‘நேர்கொண்ட பார்வை’யில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி வெளிவந்த இந்த படம் சமூதாயம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.