அயன், மாற்றான் படத்தை தொடந்து சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் வெளிவர இருக்கும் திரைப்படம் “காப்பான்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டனர். சூப்பர்ஸ்டார் அவர்கள் காப்பான் படத்தில் பண்ணியாற்றியவர் குறித்தும் அவருடைய அனுபவம் குறித்தும் ரசிகர்களிடையே பகிர்ந்துகொண்டார்.
நான் தான் ரொம்ப மிஸ் பன்றேன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசியதாவது, ” சிவாஜி படத்திற்கு கே.வி.ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்தார். சஹானா பாடலுக்கு இவர் அமைத்த ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங்கை பார்க்க மற்ற பெரிய ஒளிப்பதிவாளர்கள் வந்து பார்த்து சென்றனர். அவர் இயக்குனர் ஆவார் என்பது எனக்கு தெரியும். அவரின் படத்தில் நடிக்க வேண்டும் என விரும்பி அவரிடம் கதை கேட்டேன். சில காரணங்களால் அந்தப்படம் எடுக்க முடியவில்லை, அவரின் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பதை நான் தான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்” என்றுரைத்தார்.
நேச்சுரல் ஆர்ட்டிஸ்ட் மோகன்லால்
படம் குறித்து மேலும் பேசிய சூப்பர்ஸ்டார், காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மோகன்லால் குறித்து பேசினார். “மோகன்லால் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது எனக்கு அண்மையில் தான் தெரியவந்தது. மோகன்லால் போன்ற ஒரு நேச்சுரல் ஆர்ட்டிஸ்ட் இந்தியாவிலேயே கிடையாது. அவ்வளவு இயற்கையான நடிப்பை இந்தியாவில் எந்த ஆர்டிஸ்டும் செய்ய மாட்டார்கள். அவர் நல்ல நடிகர் மட்டுமில்லை நல்ல மனிதர். மோகன்லால் போன்ற ஒரு நடிகர் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றால். எந்த அளவிற்கு அந்த படம் இருக்கும் என்பதை நாம் நினைத்து கூட பார்க்க முடியாது”.
இமயமலையில் அகோரிகளின் மகத்துவம்
ஆர்யாவை பற்றி பேசிய சூப்பர் ஸ்டார் ஆர்யாவை பார்க்கும்போது ‘நான் கடவுள்’ அகோரி தான் ஞாபகம் வருகிறது என்று கூறினார். மேலும் இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் கூறுகையில், ” நான் ஒருமுறை இமயமலைக்கு சென்று கங்கை ஆற்றில் குளித்தபோது என் கழுத்தில் இருந்த ருத்திராட்சமாலை தவறவிட்டுவிட்டேன். பின் என் பயணத்தை தொடர்ந்த போது எதிரே வந்த அகோரி ஒருவர் என்னிடம், ‘உனக்கு ருத்திராட்ச மாலை வேண்டுமா’ என கேட்டார். நான் ‘ஆமாம்’ என்றேன். ‘கண்டிப்பாக கிடைக்கும்’ என கூறினார். பின் ஆசிரமத்தில் ஒரு பெண் எனக்காக காத்திருந்து அந்த ருத்திராட்ச மாலையை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார். இதுதான் அகோரிகள் மகத்துவம்” என பகிர்ந்தார்.
“ஹாரிஸ் ஜெயராஜின் ரசிகன் நான்”
படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பெரிய ரசிகன் என்றும், அவர் இளையராஜா-ரஹ்மான் பட காம்பினேஷன் என்றும் சூப்பர் ஸ்டார் பேசினார். “வசீகரா என்னுடைய ஃபேவரட் சாங். ஷங்கர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ரீ ரெக்கோர்டிங்கில் என்று பங்களிப்பை எப்படி வெளிப்படுத்துவது என்று எண்ணுபவர் ஹாரிஸ் என்று. இந்த படத்தில் அவர் கண்டிப்பாக மிகவும் நன்றாக இசையமைத்திருப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது” என்று புகழ்ந்துரைத்தார்.
ஹேட்ஸ் ஆப் வைரமுத்து சார்!!
கவிஞர் வைரமுத்து அவர்களை பற்றி பேசிய சூப்பர்ஸ்டார். அவர் எழுதிய ‘தமிழாற்றுப்படை’ குறித்தும் விவரித்தார். “ஒரு பாடல் கவிஞர் வைரமுத்து எழுதிருப்பதாக கூறினார்கள், அவரின் தமிழாற்றுப்படை புத்தகத்தை நான் படித்தேன். அதை படித்தபிறகு வைரமுத்து அவர்களின் மேல் இருந்த மதிப்பு நூறு மடங்கு அதிமாகிவிட்டது. அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரம் ஒரு கருத்து கூறினார், ‘நிலப்பரப்பு, அங்கு வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி வைத்துதான் ஒரு இனம் உருவாகிறது. அந்த நிலப்பரப்பு அழிந்து போனாலும் அந்த இனம் இருக்கும். ஆனால் மொழி அழிந்து போய்விடின் இனம் அழிந்துவிடும்’. அந்த இனத்தின் உயிர் மூச்சு மொழிதான். அந்த தமிழ் மொழியை வளர்த்தவர்கள், பாதுகாத்தவர்கள், பெருமை சேர்த்து தந்தவர்களின் தொகுப்பு தான் ‘தமிழாற்றுப்படை’. இளைஞர்கள் வரலாறுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், இதை தெரிந்து கொள்ள நீங்கள் தமிழாற்றுப்படை படித்தால் போதும் உங்களுக்கு அனைத்தும் தெரிந்துவிடும். ஹேட்ஸ் ஆப் வைரமுத்து சார்!” என்றுரைத்தார் சூப்பர் ஸ்டார்.
சகநடிகன் மீது அக்கறை காட்டுபவர் சிவகுமார்
சிவகுமார் அவர்களுடன் சூப்பர் ஸ்டார் அவர்கள் நடித்த ‘புவனாவின் கேள்வி குறி? மற்றும் கவிக்குயில்’ படத்தில் சிவகுமார் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த சூப்பர்ஸ்டார், ” சக நடிகன் மீது அக்கறை காட்டுபவர் சிவகுமார் அவர்கள், அப்படி இருக்கும் பொது அவருடைய பிள்ளைகள் மீது எந்த அளவிற்கு அக்கறை காட்டிருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே, ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால் அதில் ஒருவர் மட்டுமே ஒழுங்காக வளருவார்கள். ஆனால் சூர்யா, கார்த்தி இருவரும் நல்ல முறையில் வளர்ந்திருக்கிறார்கள் அந்த பெருமை உங்களையே சேரும்” என்று கூறியிருந்தார்.
அவருடைய இன்னொரு முகம் வெளிய தெரிஞ்சுது
சூர்யாவை முதல் படத்தில் பார்த்த போது சூர்யா நல்ல நடிகராக வரமாட்டார் என நினைத்ததாகவும் பின் அவரது அடுத்தடுத்த படங்களில் அவரின் கடினமான உழைப்பும், நம்பிக்கையும் அவருக்குள் இருக்கும் நடிகனை வெளிய கொண்டு வந்தது என கூறினார் சூப்பர் ஸ்டார் . மேலும் கூறிய சூப்பர் ஸ்டார் “சில நாட்களுக்கு முன்னர் , அவருடைய இன்னொரு முகம் வெளியே தெரிந்தது. கல்வியை குறித்து அவர் பேசியது அவர் கேட்ட கேள்விகள் பலவற்றை நான் ஆமோதிக்கிறேன். அது மிக பெரிய சர்ச்சை ஆனது என்பதை விட, அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது என்று தான் கூற வேண்டும். ஒரு நடிகர் பேசியதால் இது வெளியில் தெரியவில்லை. அவரின் அகரமும் அதில் படிக்கும் மாணவர்களின் கஷ்டம் தெரியவே தான் அவர் பேசினார். இங்கு சொன்னார்கள், ரஜினி பேசியிருந்தால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சூர்யா பேசியதும் மோடிக்கு கேட்டிருக்கிறது. சூர்யாவின் காப்பான் படம் நிச்சயம் ஹிட் கொடுக்கும், இன்னும் உங்களுக்கு வயசும் காலமும் இருக்கிறது, நடிப்பில் நீங்கள் டிகிரி பண்ண வேண்டும். ரசிகர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் உங்கள் தொண்டு தேவை” என்று கூறி இறுதியில் காப்பான் படம் வெற்றியடைய வாழ்த்துக்கூறி விடைபெற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.
இந்த விழாவில் நடிகர்கள் சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், கே.வி.ஆனந்த், தங்கர் பச்சான், தயாரிப்பாளர்கள் லைக்கா ப்ரோடுச்டின் சுபாஸ்கரன், நடிகை சாயீஷா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து உள்பட கலந்துகொண்டனர்.