நடிகர் சூர்யா கடைசியாக செல்வரகவன் இயக்கிய அரசியல் திரில்லர் படமான என்.ஜி.கேவில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
நீட் மற்றும் மத்திய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் அறிக்கைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அண்மையில், அகரம் அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவையொட்டி நடிகர் சூர்யா செய்தியாளர் சந்திப்பில் தேசிய கல்வி கொள்கை (NEP), நீட் தேர்வுகள் மற்றும் மிகவும் விவாதிக்கப்பட்ட 3 மொழிக் கொள்கை ஆகியவற்றின் வரைவை விமர்சித்தார்.
நலிந்த மாணவர்களை மனதில் வைத்து என்இபி (NEP) வரைவு செய்யப்படவில்லை என்றும், 3 மொழி கொள்கை மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்றும் நடிகர் சூர்யா குறிப்பிட்டிருந்தார். சூர்யாவின் கருத்துக்கள் ஆளும் அரசியல் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விமர்சனங்களை வரவழைத்தது.
இந்த சமீபத்திய சம்பவத்தை அடுத்து, நடிகர் கமல்ஹாசன் சூர்யாவின் கருத்துக்களுக்கு ஆதரவை தெரிவித்ததோடு, நடிகருக்கு எதிராக ஆளும் கட்சி தெரிவித்த கருத்துக்களையும் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்வி கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உள்ளது” என அவர் விவரித்திருந்தார்.