சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும் “Yuvan Shankar Raja – Your first love” இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொழில்முறையில் எப்போதும் நம்பகமானவர். ஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த அவரின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இதனை கடமைகளை மதிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
“இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு அறிவிக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தேதிகள் வீணாகி இருக்கிறது. இந்த ரத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
பணத்தை விடவும் நேரம் என்பது மதிப்பு மிக்கது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன். இந்த சம்பவம் எனக்கு ஒரு நிகழ்வை நடத்துவதற்கு “சரியான பங்குதாரரை தேர்ந்தெடுப்பது அவசியம்” என்ற பாடத்தை கற்பித்திருக்கிறது. மன்னிப்பு வழங்குவது மட்டுமல்ல, பார்வையாளர்கள் குறிப்பாக எனது ரசிகர்கள் எனது நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அவர்களின் நிபந்தனையற்ற அன்பை இப்பொழுது போலவே, என்றென்றும் தருவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி அதே 13ஆம் தேதி நிகழும் பட்சத்தில் நான் கலந்து கொண்டு, இந்த நிகழ்வை நடத்திக் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார் யுவன் ஷங்கர் ராஜா.