இன்றைய உலகில் மனிதனின் எதிர்பார்ப்பிற்கும் எதார்த்தத்திற்கும் நீண்ட இடைவெளி ஒன்று இருக்கும். படங்களில் பார்க்கும் காதலுக்கும் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் காதலுக்கும் நிறைய வேறுபாடுகள் அமைந்திருக்கும். காதல் சுகமானதாக இருக்கும், ஆனால் நாம் விரும்பும் ஒருவர் மற்றொருவரை விரும்புவது தான் யதார்த்தம்.
இது போன்ற காதல் நம்மில் நிறைய பேருக்கு நடந்திருக்கும், இன்று நாம் இதை உணர்வதற்கு முக்கிய காரணம் தனுஷும் செல்வராகவனும் தான்.
செல்வராகவன் படங்கள் வழக்கத்தை விட மாறுபட்ட ஒன்று, அவருடைய படங்கள் நம்மை உணர்ச்சிகளோடு கட்டிப்போடும் அளவிற்கு அமைந்திருக்கும். இவருடைய கதைகளில் சாதிக்க துடிக்கும் இளைஞன், நட்பை காதல் என கருதி வாழ்க்கையை தொலைத்தவன், காதலை காதலியிடம் வெளிப்படுத்த தயங்குபவன், அரசியல் விரும்பி, தாதா என வாழும் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துபவர் செல்வராகவன். இவரின் படங்களில் கதாநாயகன் நமது மனதில் ஆழமாக பதிவதற்கு காரணம், கதாநாயகனின் உணர்ச்சிகள் நம்முள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ஒன்று, இந்த வகையில் நம் மனதில் நின்ற ஒரு காதல் கதை தான் வினோதின் ஒரு தலை காதல்.
வினோதின் காதல் மலர்ந்து இன்றோடு 16 வருடங்கள் நிறைவடைந்தன. யார் இந்த வினோத்? சிறு வயதில் குழந்தை தொழிலாளியாய் கஷ்டப்பட்டான், தனக்கு உறுதுணையாய் இருந்த தோழியை சில கொடூரர்களால் இழந்தான். எங்கோ ஒரு மூலையில் இருந்தவன், பாதிரியார் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்தான். அழுக்கு சட்டையும், புட்டி கண்ணாடியும், ஊசி போன சாப்பாடும் என கல்லூரியில் வாழ ஆரம்பித்தவனை அனைவரும் வெறுத்தனர். ஆனால் திவ்யா அவனை வழிநடத்தி அவனின் இருண்ட வாழ்விற்கு வெளிச்சமாய் வந்தாள். இவளின் பேச்சும் வினோதிடம் நடந்து கொள்ளும் முறையும் நட்பினை வெளிப்படுத்த, இவனோ காதல் என நினைத்து கொண்டான்.
திவ்யா மற்றொவரை காதலிப்பதை பார்த்தவன் ஏற்றுக்கொள்ள முடியாமல், வாழ்க்கை மீண்டும் இருண்டு விட்டதாய் உணர்கிறான். தன்னை வழிநடத்தியவளை கரம் பிடிக்க எண்ணியது அவனுடைய தவறல்ல. பெற்றோர் இல்லை, வழிநடத்த யாரும் இல்லை எதுவுமே இல்லாத வினோத்துக்கு கிடைத்த ஒரு பெரிய வரம் தான் திவ்யா. அவளை இழக்க அவன் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. நட்பா? காதலா? என திவ்யா சிந்திக்கும் சில வினாடிகளில், காதலுக்காக உயிரை தியாகம் செய்தவன் தான் இந்த வினோத். இவரின் இந்த ஒரு தலை காதல் எல்லாரின் வாழ்விலும் நடந்த ஒரு சம்பவம். இந்த படத்தை பார்க்கும் போதோ அல்லது வினோத்தின் கதாபாத்திரம் நினைவிற்கு வரும்போதோ நமது என்ன ஓட்டம் நம்முள் இருக்கும் காதலை தட்டி எழுப்பும். காதலின் இன்ப துன்பத்தை முழுதாய் உணர்ந்தவன் வினோத்.
இத்தகைய படத்தை மிகவும் அழகாய் காண்பித்தவர் செல்வராகவன். வினோத், திவ்யா மற்றும் ஆதி என முக்கோண வடிவத்தில் படம் மூன்று பேரை மையமாக கொண்டது. இந்த ‘காதல் கொண்டேன்’ மக்களின் மனதில் நிலைத்து நின்றதற்கு மூன்று பேர் தான் காரணம். உணர்ச்சிமிக்க கதையை கொடுத்த செல்வராகவன், உணர்வுகளை நடிப்பால் வெளிக்காட்டிய தனுஷ் மற்றும் உணர்வுகளை இசையால் தட்டி எழுப்பிய யுவன் சங்கர் ராஜா.
காதல் காவியம் காலத்தால் அழியாத ஒன்று, காதல் இருக்கும் வரை ‘காதல் கொண்டேன்’ மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.