2004ல் வெற்றிபெற்ற காதல் படங்களில் ‘7ஜி ரெயின்போ காலனி’ படமும் ஒன்று. இயக்குனர் செல்வராகவன் அவர்களின் மறக்க முடியாத ஒரு படைப்பாக இந்த படம் இருந்து வருகிறது. இன்றும் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ஒரு காதல் படம். இந்த படத்திற்கு உயிரூட்டும் வகையில் இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.
இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் அண்மையில் சந்தித்து உள்ளனர். இவர்கள் இருவரும் சந்தித்த தருணத்தை தனது டுவிட்டரில் சோனியா அகர்வால் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ” நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் யாரைச் சந்தித்தேன் என்று பாருங்கள் …” என ஆங்கிலத்தில் பதிவிட்டு அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை சேர்த்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
7 ஜி ரெயின்போ காலனி தெலுங்கில் 7 ஜி பிருந்தாவன் காலனி என்று எடுக்கப்பட்டது, இது வெற்றிகரமாக ஓடி, அதிக வசூலை பெற்று தந்தது. சமீபத்தில், இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, ‘மலால்’ என்று பெயரிடப்பட்டது, இதில் ஷர்மின் செகல் மற்றும் மீசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரீமேக்கை டி-சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பன்சாவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ‘பத்மாவத்’ இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து தயாரிக்கிறார்.