நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன் நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார். கடந்த 14ந் தேதி வெளிவந்திருக்க வேண்டிய படம். ஆனால் படத்தின் டைட்டிலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு கோர்ட் தடை விதித்ததால், படம் வெளிவரவில்லை.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா கொலையுதிர் காலம் என்ற நாவலை எழுதியிருந்தார். இந்த நாவலின் உரிமையை சுஜாதாவின் மனைவியிடமிருந்து பாலாஜிகுமார் என்பவர் பெற்றிருந்தார். தன்னிடம் உரிமம் உள்ள கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார். இதையடுத்து காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எறு கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.