இளைஞர்களின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் இயக்கத்தில் இரண்டாவது படமாகவும், அவரது நடிப்பில் ஐம்பதாவது படமாகவும் தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள #D50 படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு நேற்று வெளியானது. இப்படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப் பட்டுள்ளது. இந்த முதல் தோற்றம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ வலைத்தள பக்கங்களில் வெளியிடப் பட்டுள்ளது.இத்திரைப்படத்தில் தனுஷுடன்,சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா போன்ற முன்னணி கலைஞர்களும் நடிக்கின்றனர். நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்தவர், தனுஷ். இயக்குனராகவும் ‘ப.பாண்டி’ திரைப்படத்தின் மூலம் முத்திரை பதித்தவர்.இத்திரைப்படத்தின் மூலம் ஏதாவது மாயஜாலம் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். தனுஷின் படவரிசையில், அவருக்கு அமைந்த புதுப்பேட்டை, வடசென்னை போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் உருவாகி இருக்கும் என்ற உணர்வை, இந்த படத்தின் முதல் தோற்றம் நமக்கு ஏற்படுத்துகிறது.

இப்படத்திற்கான இசையமைப்பு பணிகளை ஆஸ்கர் நாயகன் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷூம், படத்தொகுப்பாளராக ஜி.கே.பிரசன்னாவும் பணியாற்றுகின்றனர். சண்டைப் பயிற்சிக் கலைஞராக பீட்டர் ஹெயின் பணியாற்றுகிறார்.இப்படம் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரவுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் 100 கோடி ரூபாயைத்தாண்டி வசூல் செய்தது. இந்நிலையில் ’ராயன்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகார்ஜூனா இணைந்து நடித்து வரும் படமும் தயாராகி வருகிறது. இந்தப் படமும் 2024-ஆம் ஆண்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.