கடந்த சில மாதமாகவே அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்றும், இல்லை இப்போதைய சூப்பர் ஸ்டாரே விஜய் தான் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு பெரிய யுத்தமே நடந்து வந்தது. அதேசமயம் பலரும் அப்போதும் இப்போதும் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என கூறி வந்தார்கள்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி என்றுமே அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்று பகிரங்கமாகவே உணர்த்தி விட்டது.
இந்த பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் போகிற போக்கில் பேசிய சில வார்த்தைகளால் மிகப்பெரிய பூதாகரமான சர்ச்சையாக மாறிவிட்டது.
இந்த நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ் இந்த சர்ச்சை குறித்து ஒரு மிகப்பெரிய விளக்கம் அளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அவர் பேசும்போது, “எப்போதுமே நடிகர் விஜய் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என எங்கேயாவது கேட்டிருக்கிறாரா ? யாரோ சிலர் போகிற போக்கில் பேசும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு எதற்காக தேவையில்லாத இந்த சண்டை ? விஜய்யை சந்திக்கும்போதே அவர் என்னிடம் தலைவர் எப்படி இருக்கிறார், தலைவர் என்ன செய்கிறார் என மூச்சுக்கு மூச்சு தலைவர் என்று தான் குறிப்பிட்டு பேசுவார். அவர் ஒருபோதும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டதில்லை.
சில பேர் மாங்கா மரத்தில் தேங்காய் விளையுது என சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் பலரும் அதையே நம்பிக்கொண்டு மாங்காய் மரத்தில் தேங்காய் விளைகிறதா என பார்க்கிறார்கள். மாங்காய் மரத்தில் மாங்காய் தான் விளையும்.. தேங்காய் மரத்தில் தேங்காய் தான் விளையும்.. சினிமாவில் அவரவருக்கான பட்டம் அவரவர்களுக்கு தான்” என்று கூறியுள்ளார்.