V4UMEDIA
HomeReviewடைனோசர்ஸ் ; விமர்சனம்

டைனோசர்ஸ் ; விமர்சனம்

வட சென்னை பின்னணியில் உருவாகி இருக்கும் இன்னொரு கேங்ஸ்டர் படம் தான் இந்த டைனோசர்.

வட சென்னையில் தனா மற்றும் மண்ணு என அண்ணன் தம்பிகள் இருவர். இருவருக்குமே ரவுடியிசம் பழக்கம் தான் என்றாலும் அதிலிருந்து ஒதுங்கி டெய்லர் ஷாப் வைத்து நடத்தி வருகிறார் தனா. மண்ணு தன் வேலையை பார்த்து வருகிறார். இவர்களின் நண்பர் துரை. இவரும் ரவுடி குரூப்பில் ஒருவர்தான் என்றாலும் திருமணத்திற்கு பிறகு அதை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து வாழ நினைக்கிறார்.

ஆனால் இவர் ஏற்கனவே எதிர் குழுவை சேர்ந்த ஒருவரை வெட்டிய எட்டு பேரில் ஒருவர். அதனால் இந்த எட்டு பேரையும் போலீஸில் சரணடையச் செய்து எதிரியின் கோபத்தை தணிக்க முயற்சிக்கிறார் இவர்களின் தலைவர். ஆனால் துரையை ஜெயிலுக்குப் போக வேண்டாம் என கூறிவிட்டு அவருக்கு பதிலாக தனா ஜெயிலுக்கு போகிறார்.

இதனால் எதிரிகள் ஓரளவுக்கு நிம்மதியாக ஆனாலும் 8 பேரில் ஒருவராக துரை ஜெயிலுக்கு போகாமல் இருப்பதும் அதுவும் தங்கள் வீட்டிற்கு தேடி வந்திருப்பதும் அவர்களுக்கு தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து துரையை போட்டுத் தள்ள முயற்சிக்கின்றனர். அவர்கள் நண்பன் மண்ணு அவரை காப்பாற்றினாரா, இல்லை என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

மண்ணு கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் உதய் கார்த்திக் எதற்கும் அசராத குணம் கொண்டு எந்த ஒரு குற்ற பின்னணியிலும் சிக்காமல் பார்த்துக் கொள்ளும் திறனுடன் வலம் வரும் நக்கல் நய்யாண்டி செய்யும் குறும்புக்கார இளைஞனாக சிறப்பாக செய்துள்ளார். முதலில் சாதாரணமாக தோன்றினாலும், காட்சிகள் நகர படத்தில் நடை, உடை, பேச்சு, சண்டை, குத்தாட்டம் என்று நடிப்பில் விஸ்வரூபமெடுத்துள்ளார்.

தனவாக நடித்துள்ள ரிஷி நட்பை உயிராக மதிக்கும் தனாவாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அடியாள் துரையாக மாறா படத்தில் சைலன்ட்டாக தோன்றினாலும் வைலன்ட்டாக இன்டர்வெல் பிளாக்கில் திருப்பத்தை தரும் போது கை தட்டல் பெறுகிறார். நண்பனின் பாசத்திற்காக நல்லவனாக மாற நினைக்கும் நேரத்தில் எதிரிகளிடம் சிக்கும் காட்சியில் நமக்குள் படபடப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

வில்லத்தனத்தில் மனேக்ஷா, கவின் ஜெய்பாபு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். இதில் குறிப்பாக மனேக்ஷா கண்களை சொருகிக் கொண்டு பார்க்கும் பார்வை மற்றும் பேசும் வசனங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, மிரட்டலும் ஆக்ரோஷம் நிறைந்த வில்லனாக படத்தில் அதகளம் பண்ணி தூள் பரத்துகிறார் கவின் ஜெய்பாபு.

கிளியப்பனாக வீட்டிலேயே துரையை பிளான் போட்டு தூக்க நினைக்கும் அமைதியான, ஆனால் அதட்டல், உருட்டலுடன் மிகையில்லா நடிப்பு கச்சிதம். அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜானகியும் மிகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.

பாடல்களில் போபோ சசியின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

வழக்கமாக நிறைய வட சென்னை பின்னணி ரவுடிசம் குறித்த படங்கள் வெளியாகி இருந்தாலும் இந்த படத்தின் காட்சிகளாலும் கதையை நகர்த்தியுள்ள விதத்தாலும் சற்றே வித்தியாசப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.மாதவன்.

Most Popular

Recent Comments