தெலுங்கில் உருவாகி தமிழில் வெளியாகி உள்ள படம் தசரா. நான் ஈ புகழ் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள இந்த தசரா படம் கொண்டாட்டமா? இல்லையா ? பார்க்கலாம்.
நானி, தீக்சித் ஷெட்டி, கீர்த்தி சுரேஷ் மூவரும் நண்பர்கள் சிறு வயதிலேயே நண்பன் தீக்சித், கீர்த்தி சுரேஷை விரும்புவதை அறிந்து தனது காதலை மறைத்து அவனுக்கு விட்டுக் கொடுக்கிறார் நானி. பின்னாளில் கீர்த்தி சுரேஷின் அம்மாவிடமே வாதாடி தனது நண்பனுக்கே கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து வரை ஏற்படும் செய்கிறார்.
இன்னொரு பக்கம் அந்த ஊரில் உள்ள மதுக்கடையை மையப்படுத்தி அரசியல் நிகழ்கிறது. அப்போது மதுவிலக்கு அமலில் இருப்பதால் மதுக்கடையை திறப்பதாக கூறி வாக்களித்து பதவியை பிடிக்கிறார் சமுத்திரக்கனி. அவரது அண்ணன் சாய்குமார் தோற்றுப் போகிறார். சமுத்திரக்கனியின் மகன் ஷைன் டாம் சாக்கோ அடுத்து தானே தேர்தலில் நிற்பதற்காக இளைஞர்களை கவரும் விதமாக கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் ஜெய்ப்பவருக்கு மதுக்கடை கேஷியர் வேலை தருவதாக வாக்குருதி தருகிறார்.
ஆனால் அவரிடமிருந்தே வரும் எதிர்ப்பையும் மீறி நானி தனது குழுவினருடன் போட்டியில் ஜெயிக்க அந்த வேலையை தீக்சித்துக்கு பெற்று தருகிறார். ஆனால் சொன்னபடி நடந்து கொள்ளாமல் ஷைன் டாம் சாக்கோ வேலை தர மறுக்க இருதரப்புக்கும் பிரச்சனையாகிறது. அவருக்கு பாடம் புகட்டும் விதமாக அடுத்து வரும் தேர்தலில் சாய்குமாரை தேர்தலில் நிறுத்தி அவருக்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்கின்றனர் நானியும் அவரது நண்பர்களும்.
இதனால் கோபமான ஷைன் டாம் சாக்கோ கீர்த்தி சுரேஷ் திருமண நாளன்று புது மாப்பிள்ளையான தீக்சித்த்தை வெட்டி சாய்கிறார். பழியை நானி மீது சுமத்தவும் முயற்சிக்கிறார். தீக்சித்தை கொல்வதற்கு நிஜமாகவே மதுக்கடை பிரச்சினை தான் காரணமா அல்லது வேறு ஏதாவதா ? நண்பன் இறந்தவுடன் அதற்காக நானி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கிறார் ? தனது காதலை அவர் கீர்த்தி சுரேஷிடம் சொன்னாரா ? இவர்களுக்கு ஷைன் டாம் சாக்கோ மூலமாக வேறு என்ன தொந்தரவு வந்தது ? அதை இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதெல்லாம் மீதி கதை.
படம் ஆரம்பிக்கும்போதே ரயிலில் நிலக்கரி திருட்டு என ஒரு பரபர ஆக்சன் படத்திற்கான முன்னோட்டத்துடன் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் போகப்போக அப்படியே தடம் மாறி கிராமத்து அரசியல், வஞ்சம், பெண்ணுக்காக உயிர் பலி என திசை மாறி விடுகிறது. இருந்தாலும் அதிலும் முடிந்தவரை சுவாரசியம் காட்ட முயற்சிக்கிறார்கள்.
படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது நானி தானா என்று கேட்கும் அளவிற்கு ஆளே கறுத்துப்போய் பரட்டை தலையும் அடர்ந்த தாடியுமாக அப்படியே மாறிப்போயிருக்கிறார் நானி. படத்தில் மொத்தமே இவருக்கு நான்கு பக்க வசனங்கள் இருந்தால் அதிகம். அந்த அளவிற்கு வசனங்களை குறைத்து நடிப்பால் மட்டுமே தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் நானி.
கீர்த்தி சுரேஷுக்கு இது இன்னும் ஒரு மைல் கள் கதாபாத்திரம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஆரம்ப முதல் இறுதி வரை தனது கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் மனுஷி. . அதேசமயம் இடைவேளைக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளால் அப்படியே டோட்டலாக இன்னொரு விதமான உருமாற்றத்தையும் அழகாக வெளிப்படுத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக அவர் ஆட்டும் ஒரு நடனமும் அதற்கான ஸ்டெப்ஸும் செம.
படத்தில் அவரது நண்பராக வரும் தீக்சித் ஷெட்டிக்கும் சம அளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
பண்பட்ட அரசியல்வாதியாக சாய்குமார்.. அரசியல்வாதி தான் என்றாலும் அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்க வேண்டும் என நினைக்கும் சமுத்திரக்கனி என இவர்கள் இருவருக்கும் அளந்தெடுத்து தைத்த சட்டை போல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் சமுத்திரக்கனியின் கெட்டப் புதுசு.
இவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்வது போல கதாநாயகனுக்கு இணையாக வில்லத்தனத்தில் கலக்கியுள்ளார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இங்கே தமிழில் பீஸ்ட் படத்தில் அவரை வேஸ்ட் பண்ணி இருந்தார்கள். தெலுங்கில் அவருக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. இனி அவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வரும் என நம்பலாம்.
கருப்பு புழுதி பறக்கும் அந்த கிராமத்து கதைக்களத்திற்குள் நாமும் வாழ்வது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறது சத்யன் சூரியனின் மிரட்டலான ஒளிப்பதிவு.
நட்பு காதல் துரோகம் பகை முடித்தல் என இவற்றை ஒரு பூமாலையாக தொடுத்து எங்கும் தொய்வில்லாமல் படத்தை அழகாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓட்டேலா. அவருக்கு பக்கபலமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையும் கை கொடுத்திருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்புக்காகவே தாராளமாக இந்த படத்திற்கு டிக்கெட் போடலாம்.