பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பெரும்பாலும் பான் இந்தியா என்கிற வார்த்தை தற்போது அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. தமிழ் தெலுங்கு தவிர கன்னட திரையுலகத்தில் கூட சமீப காலமாக வெளியாகும் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அந்த திரையுலகின் வியாபார எல்லையை விரிவு படுத்தியுள்ளன.
அதுமட்டுமல்ல இப்படி பான் இந்தியா என்கிற பெயரில் வெளியாகும் படங்களில் அனைத்து மொழிகளுக்கும் தெரிந்த முகங்களாக தேடிப்பிடித்து நடிக்க வைப்பதும் நடந்து வருகிறது. அப்படி ஒரு சில நடிகர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் தற்போது பான் இந்தியா நடிகர் என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் தற்போது பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் அவர் நடித்து வருவதால் அவருக்கு இந்த பான் இந்தியா நடிகர் என்கிற பெருமை கிடைத்துள்ளது. அதேசமயம் தன்னை பான் இந்தியா நடிகர் என்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அப்படி அழைப்பது தனக்கு மிகுந்த அழுத்தத்தையே தருகிறது என்றும் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.
“அனைத்து மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். குஜராத்தி, பெங்காளி மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக் கொள்வேன்,, நான் அடிப்படையில் ஒரு நடிகர்.. என்னை நடிகர் என்று மட்டும் அழைத்தாலே போதும்” என்று கூறியுள்ளார்