பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற விக்ரம், சூட்டோடு சூடாக பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த பட துவக்கத்திலேயே விக்ரம் தோற்றம் குறித்து வெளியான கதாபாத்திர போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார் விக்ரம்.
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை பார்வதி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் நடைபெற்று வருகிறது. படத்தின் கதையும் அந்த பகுதியை சார்ந்த மனிதர்களை மையப்படுத்தி உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அங்கே நடைபெற்ற படப்பிடிப்பின்போது அந்த பகுதியில் இருந்த மக்களுடன் விக்ரம் உரையாடி மகிழ்ந்துள்ளார். அனைவருக்கும் தான் பேசுவது கேட்க வேண்டும் எனும் விதமாக கையில் மெகாபோனுடன் அவர் பேசும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.