விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் லத்தி. வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இதுநாள்வரை அதிரடி போலீஸ் அதிகாரிகளின் வீர தீர பராக்கிரமங்களை மட்டுமே சினிமாவாக எடுத்து வந்த சூழலில், முதன்முறையாக ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.
இந்த படம் குறித்த தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் விஷால் பகிர்ந்து கொண்டபோது, “இந்த படத்தின் கிளைமாக்ஸ்க்கு முந்திய 40 நிமிட காட்சிகள் ஒரு மிகப்பெரிய கட்டி முடிக்கப்படாத கட்டடத்தில் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கே நடைபெற்றது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் சண்டைக்காட்சிக்காகவே அவருக்கு இந்த படத்தில் தேசிய விருது கிடைக்கும்.
நான் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்க உள்ளேன். ஆனால் விலங்குகளை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. துப்பறிவாளன் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குவேன்.
அதேபோல நடிகர் விஜய்யை நான் பார்த்து ரசித்த வகையில் அவருக்கென தோதாக ஒரு கதையை எழுதி வருகிறேன். நேரம் வரும்போது அவருடைய படத்தை இயக்குவேன்” என்று கூறியுள்ளார் விஷால்.
விஷால் நடிகராக அறிமுகமாவதற்கு முன் இயக்குனர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.