இயக்குனர் மணிரத்னம் அவர்களது தயாரிப்பு நிறுவனம் ‘மெட்ராஸ் டாக்கீஸ். இவர் இயக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குனர்களின் படங்களையும் தயாரித்திருக்கிறார். இவரது உதவி இயக்குனர் ‘தனா’ இயக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷனுடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கின்றனர்.
இயக்குனர் ‘தனா’ உடன் மணிரத்னமும் இந்த படத்திற்கு கதை மற்றும் வசனங்கள் எழுதிவருகிறார். இந்த படத்திற்கு நாயகனாக விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியனும், இவரது தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு பாக்கியராஜ் ,சரத்குமார், ராதிகா சரத்குமார் நடிக்க இருக்கின்றனர்.
இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்க, ‘அபியும் நானும்’ புகழ் ப்ரீத்தா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக அமரனும், உடை வடிவமைப்பு பணிகளை ஏகா லகானியும் இந்த படத்துக்கு ஏற்றுள்ளனர். பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு பாடல் எழுத உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் தனா ஏற்கனவே விஜய் ஜேசுதாஸை ஹீரோவாக வைத்து ‘படைவீரன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.